வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து வர்த்தகர் கொலை: சிறுபான்மையினர் மீது வன்முறை தீவிரம்
டாக்கா: வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து வர்த்தகர், மூன்று பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம்வில் கடந்த ஆண்டு முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, ஹிந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும், ஹிந்துக்களை குறிவைத்து 51 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், வங்கதேசத்தின் காளிகஞ்ச் பகுதியில் லிட்டன் சந்திர தாஸ் (60) என்ற ஹிந்து வர்த்தகர் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ளார். அவர் அப்பகுதியில் ஹோட்டல் மற்றும் இனிப்புக் கடை நடத்தி வந்தவர் என தெரிய வந்துள்ளது.
தகவலின்படி, கோபமடைந்த மூன்று பேர் கொண்ட கும்பல் முதலில் லிட்டன் சந்திர தாஸை அடித்து உதைத்துள்ளது. பின்னர், மண்வெட்டியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடரும் அநீதி
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை தீவிரமடைந்ததன் பின்னர், முதலில் மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (30) என்ற இளைஞர், மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஹிந்துக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தற்போது, லிட்டன் சந்திர தாஸின் கொலை சம்பவத்தை தொடர்ந்து, வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
