டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்துக்கு பின் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி, மொத்தமுள்ள 299 தொகுதிகளில் 216 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின் அக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது.
2024 ஆகஸ்டில் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. அவாமி லீக் நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கலீதா ஜியா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் தாரிக் ரஹ்மான் கட்சி பொறுப்பை ஏற்றார்.
பிப்., 12ல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பி.என்.பி. மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரஹ்மான் தலைமையிலான 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
வங்கதேச பார்லியின் மொத்த பலம் 350. இதில் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். 300 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 42,779 ஓட்டுச்சாவடிகளில் காலை துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை நிறைவடைந்தது. 59 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
ஓட்டு எண்ணிக்கையில் துவக்கம் முதலே பி.என்.பி. முன்னிலை வகித்தது. பெரும்பான்மைக்கு 151 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 216 இடங்களை கைப்பற்றி பி.என்.பி. வெற்றி பெற்றது. ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 76 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பிற கட்சிகள் ஏழு இடங்களில் வென்றன.
இதன் மூலம் தாரிக் ரஹ்மான் முதன்முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். புதிய அரசு பதவியேற்க உள்ளதை அடுத்து, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலீதா ஜியாவின் கட்சி 1991-96 மற்றும் 2001-06 காலகட்டங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
