வங்கதேசத்தில் ஓயாத வன்முறை… டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி
டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தாயகம் திரும்ப உள்ளதும் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வங்கதேசத்தில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன், போராட்டங்களின் போது இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்களும் நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சூழ்நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளால் லண்டனில் தஞ்சமடைந்திருந்த தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வங்கதேசம் திரும்ப உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு, டாக்கா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் டாக்காவின் மோக்பஜார் மேம்பாலத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தோர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் 21 வயதான சைபூல் சையாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் காரணமாக நிலைமை கட்டுப்பாட்டை மீறி வருவதாக கூறப்படுகிறது. இதனால், வங்கதேச போலீசார் கடும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.
