டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின்போது ஹிந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. அண்மையில் அவரது ஆட்சி முடிந்து, வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்றது. இதனால் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், சந்த்பூர் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது ஹிந்து பெண் ஒருவர் இசை நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தபோது, மூன்று நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் உடல் ஊனமுற்றவர் என்றும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
