புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் லோக்சபா மரபுகளை விட உயர்வானவரா என்று மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது கிரண் ரிஜிஜூ இந்த கருத்தை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த அவையில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் சமமானவர்கள். சபையில் யார் பேசினாலும் அதற்கு சபாநாயகரின் அனுமதி அவசியம். ஒருவர் அமைச்சர் என்பதற்காக மட்டும் மைக்ரோபோன் தானாக இயங்காது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் லோக்சபா மரபுகளை மீறி உயர்ந்தவர் போல நடந்து கொள்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவையில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி பெற வேண்டும் என்ற விதி கூட அவருக்கு தெரியாதா என்று அவர் விமர்சித்தார்.
ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த காலத்தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். பூஜ்ஜிய நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பிரச்னைகள் எழுப்பப்பட்டதுடன், விதி 377 கீழ் பல பொதுநலன் சார்ந்த விஷயங்களும் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு நிகழ்வை குறிப்பிட்டு அவர் கூறுகையில், பிரதமர் அவையில் அமர்ந்திருந்தபோது ராகுல் அங்கிருந்து வந்து அவரை கட்டிப்பிடித்த சம்பவத்தை நான் முதன்முறையாக பார்த்தேன். இப்படி நடந்துகொள்ளும் எதிர்க்கட்சித் தலைவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 50 எம்.பி.க்கள் தன்னை சந்தித்து, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும், ஆனால் அரசியல் அழுத்தங்களால் அவர்கள் அதை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது 10 மணி நேர விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
