புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சுரங்கத் துறை துணை இயக்குநர் தேபப்ரதா மொஹந்தியின் வீட்டில் இருந்து ரூ.4.27 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கட்டாக்கில் பணியாற்றி வந்த அவர், நிலக்கரி சுரங்கங்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கொண்டவராக இருந்தார். சமீபத்தில் உரிமம் கோரிய ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் களமிறங்கி, குறித்த தொகையை பெறும் தருணத்தில் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து அவரது அலுவலக மேஜை டிராயரில் இருந்து 1.20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. பின்னர் புவனேஸ்வரில் உள்ள அவரது வீடு, பத்ராக் மாவட்டத்தில் பெற்றோர் வசிக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பைகள் மற்றும் அலமாரிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டது.
முதற்கட்ட தகவலின்படி மொத்தம் ரூ.4.27 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்மீது ஏற்கனவே பல லஞ்ச புகார்கள் இருப்பதாகவும், 2009ஆம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் யஷ்வந்த் ஜெத்வா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில வரலாற்றில், ஊழல் வழக்கில் இத்தனை அளவு பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
