மதுரை: மகளிர் உரிமைத் தொகையாக ஒரே நாளில் ரூ.6500 கோடி வழங்கிய அரசுக்கு, பல ஆண்டுகளாக போராடும் பகுதிநேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிதியில்லையா என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசியலமைப்பில் ‘சம வேலைக்கு சம சம்பளம்’ குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் நிரந்தரமா, தற்காலிகமா என்ற பேதம் இருக்கக் கூடாது.
பஞ்சாப், ஹரியானா மாநில தற்காலிக பணியாளர்கள் சம்பள விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.காதர் மற்றும் எஸ்.ஏ.போப்டே அடங்கிய அமர்வு ‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில வழக்கில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிட்டல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை முன்னுதாரணமாக கொண்டு தமிழகத்திலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 15 ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பணி நிரந்தரத்திற்கு ரூ.240 கோடி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க ஆண்டுக்கு ரூ.18 கோடி மட்டுமே தேவைப்படும். எனவே பிப்., 17ல் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் பணி நிரந்தரம் மற்றும் சம்பள முரண்பாடு தீர்வு அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
