சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தமிழக சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும், அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கும் என்பது உறுதியாக இருந்தது.
திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், பிற வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணி வரை வழங்கப்பட்டிருந்தது.
ஆறு வேட்பாளர்களை தவிர மற்றவர்கள் யாரும் போட்டியில் இல்லாததால், திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக், தம்பிதுரை மற்றும் அன்புமணி ஆகியோர் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்தார்.
இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தம்பிதுரை மற்றும் அன்புமணி தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
