புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ராகுலைப் போல தொலைநோக்கு பார்வை இல்லாத லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரை இதுவரை நான் பார்த்ததில்லை. சபாநாயகருக்கு எதிராக ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி, பின்னர் சபையை விட்டு வெளியேறுவது சரியான அணுகுமுறை அல்ல.
முகலாய வம்சத்தின் கடைசி பேரரசரைப் போலவும், போலி காந்தி குடும்பத்தின் கடைசி இளவரசராகவும் ராகுல் திகழ்கிறார் என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் நகர்ப்புற நக்சல்கள் போல செயல்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அரசு மாநிலத்தை பாதிக்கும் முக்கிய பிரச்னைகளை தீர்க்கத் தவறிவிட்டதாகவும் அவர் கூறினார். மம்தா பானர்ஜியின் நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேற்கு வங்கத்தில் வேலையின்மை பிரச்னை குறித்து அவர் ஒருபோதும் பேசுவதில்லை என்றும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கூட பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மம்தா பானர்ஜி பேசும் போது தேர்தல் ஆணையம், லோக்சபா அல்லது சபாநாயகர் குறித்து மட்டுமே பேசுகிறார் என்றும் அவர் கூறினார்.
மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கேட்பார்கள் என்றும் கிரிராஜ் சிங் தெரிவித்தார்
