புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா வழங்கிய விலக்கு தொடர்பாக, மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாட்கள் விலக்கு அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த விலக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கிறதா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தனது சொந்தக் கட்சியில் இருந்து விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை மதிக்க வேண்டும். ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்படவில்லை என்றால், அவர்கள் அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
அதனால் சர்வதேச அளவில் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படும். ஆனால் இந்த 30 நாள் விலக்கு காரணமாக அந்த காலகட்டத்தில் அவர்கள் வெளிப்படையாக ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க முடியும்.
சர்வதேச மோதல்களில் ஒரு பொதுநிலையை எடுத்துக்கொள்ளும்போது அரசு எதிர்கொள்ளும் சவால்களை விமர்சகர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்று சசி தரூர் கூறினார்.
மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அலட்சியமாக இருக்க முடியாது!
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் சசி தரூர் மேலும் கூறியதாவது:
இந்த போரை நிறுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். பதற்றத்தை குறைத்து ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் நலனுக்கு சிறந்தது.
இந்த மோதல் பலரின் வாழ்க்கையையும், அவர்களின் வேலை திறனையும், வெளிநாடுகளில் இருந்து குடும்பங்களுக்கு அனுப்பப்படும் பணத்தையும் பாதிக்கும். எனவே இந்த விவகாரத்தில் இந்தியா அலட்சியமாக இருக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
