புதுடில்லி: 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ தேசிய அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த ராஜா மொகைதீன் தேசிய அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்நிலை பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது.
மொத்தம் 1,087 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு இந்த தேர்வு நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 958 பேரை சிவில் சர்வீஸ் பதவிகளில் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் தேசிய அளவில் அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடம் பெற்றுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். ஆகான்ஷ் துல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
ராஜேஸ்வரி சுவீ ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று திண்டுக்கல்லில் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் 7வது இடத்தை சென்னையைச் சேர்ந்த ராஜா மொகைதீன் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் தமிழக மாணவர்கள் இடம்பெற்றது தற்போது தான்.
மேலும் கோவையைச் சேர்ந்த ஸ்ருதி தேசிய அளவில் 18வது இடத்தை பிடித்துள்ளார்.
முதலிடம் பெற்ற அனுஜ் அக்னிஹோத்ரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அவர் ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர்.
இந்த தேர்வில் தேசிய அளவில் முதல் 10 இடங்களில் 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
தலைவர்கள் வாழ்த்து
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வில் விரும்பிய முடிவைப் பெற முடியாதவர்களுக்கு இந்த தருணம் கடினமாக இருக்கலாம். ஆனால் பெரிய பயணத்தில் இது ஒரு படி மட்டுமே. எதிர்காலத் தேர்வுகளிலும், நாட்டிற்காக சேவை செய்ய பல வாய்ப்புகள் முன்பாக உள்ளன. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.
முதல்வர் ஸ்டாலின்
நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வருவது பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் முதல் கட்டமே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறது என்றால், அதன் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பாருங்கள். தமிழக இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சாதனை படைப்பார்கள்.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை
2025ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்த அனுஜ் அக்னிஹோத்ரி மற்றும் ராஜேஸ்வரி சுவீ ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் எண்ணற்ற இளைஞர்களுக்கு பெரிய கனவுகளை காண ஊக்கமளிக்கும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 958 பேருக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் எதிர்காலம் அவர்களின் திறமையான கைகளில் பாதுகாப்பாக உள்ளது.
