சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகவும், அரசியல் நாகரிகமற்ற முறையிலும் பேசிய திமுக நிர்வாகியின் கருத்துக்கு, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில், திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம், பிரதமர் மோடியை குறித்துப் பொது மேடையில் ஆட்சேபிக்கத்தக்க மற்றும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டினார். இதுபோன்ற அரசியல் நாகரிகமற்ற பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
தேசத்தின் உயரிய பதவியில் இருக்கும் தலைவரை இழிவுபடுத்தி பேசுவதும், அந்த பேச்சை மேடையில் இருந்தவர்களும் சுற்றியிருந்தவர்களும் கைத்தட்டிச் சிரித்து ரசித்ததும், திமுகவின் குரூரமான அரசியல் போக்கை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
பிரதமரை குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதிலிருந்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது வரை, அரசியல் மாண்பின் எல்லைகளை தொடர்ந்து மீறி வரும் திமுகவின் கீழ்த்தரமான செயல்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில், பிரதமரை அவமதித்த திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். உலகம் முழுவதும் போற்றப்படும் தலைவரை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இழிவுபடுத்தும் திமுக, விரைவில் மக்கள் முன்னிலையில் தக்க பதிலை சந்திக்கும் நாள் தூரமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
