மோடி–டிரம்ப் நட்பு உண்மையானது: அமெரிக்கா கருத்து
புதுடில்லி: இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி வேறு யாரும் கிடையாது என்றும், பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் உண்மையான நண்பர் என்றும் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் பேசிய அவர், இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை குறித்து பலர் கேள்வி எழுப்பி வருவதாக கூறினார். வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில் இரு தரப்பும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வர்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக கூறிய அவர், இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு என்பதால், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது எளிதான காரியம் அல்ல என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், அதைச் செய்து முடிக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக கூறினார்.
இந்தியா–அமெரிக்கா உறவில் வர்த்தகம் முக்கியமானதாக இருந்தாலும், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார். மேலும், பாக்ஸ்சிலிகா அமைப்பில் முழுநேர உறுப்பினராக இணைய இந்தியாவுக்கு அடுத்த மாதம் அழைப்பு வரும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி வேறு யாரும் கிடையாது என்றும், இந்த நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய கூட்டாண்மையாக இந்தியா–அமெரிக்கா உறவு அமையும் என்றும் அவர் கூறினார். உலகின் பழமையான ஜனநாயகத்திற்கும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கும் இடையிலான சங்கமமாக இது இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அதிபர் டிரம்ப் இரு ஆண்டுக்குள் மீண்டும் இந்தியா வருவார் என்றும், பல நாடுகளுக்கு அவருடன் பயணம் செய்திருந்தாலும், பிரதமர் மோடியுடன் உள்ள அவரது நட்பு உண்மையானது என்றும் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
