கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல், நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அபாயமாக மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாகக் கருதுவதால், எல்லை வேலிகள் அமைப்பதற்கு மேற்கு வங்க அரசு நிலம் வழங்க மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், வரும் ஏப்ரல்–மே மாதங்களில் தமிழகத்துடன் இணைத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, 15 ஆண்டுகளாக முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்.
இதற்கிடையே, இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மாநில அரசியல் சூழல் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
வந்தே மாதரம் குறித்து அமித் ஷா
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூரில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்களை பாதுகாப்பதே மம்தா பானர்ஜி அரசின் ஒரே நோக்கம் என கூறினார். அதற்காகவே, நாட்டின் தேசபக்தியை வெளிப்படுத்தும் “வந்தே மாதரம்” முழக்கத்தை அவர் எதிர்க்கிறார் என்றும் விமர்சித்தார்.
இதன் மூலம் மாநிலத்தின் பாரம்பரியம், இந்திய கலாசாரம் மற்றும் தேசிய அடையாளத்திற்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்றும், இதை மேற்கு வங்க மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
தேர்தல் குறித்த அறிவிப்பு
வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும் என்றும், அனைத்து தொகுதிகளிலும் அந்தக் கட்சி ‘டிபாசிட்’ இழக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
“வந்தே மாதரம்” என்பது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இறுதி முழக்கமாக இருந்தது என்றும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அந்தப் பாடலின் 150-வது ஆண்டை நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். இந்த முழக்கம் மேற்கு வங்கம் முதல் குஜராத் வரை, ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒலிக்கும் என்றும் அவர் கூறினார்.
பாஜ ஆட்சி உறுதி
வரும் தேர்தலில் பாஜ 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்றும், பீஹாரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தையும் கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அமித் ஷா கூறினார். பகவான் ராமருக்கு ராவணன் இடையூறு செய்தது போல, மம்தா பானர்ஜி தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தினாலும், இந்த முறை பாஜ ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லை பாதுகாப்பு & ஊழல் குற்றச்சாட்டு
ஊடுருவல் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த மேற்கு வங்க அரசு எல்லை வேலிகள் அமைப்பதற்கு நிலம் வழங்க மறுப்பதாகவும் அமித் ஷா மீண்டும் சுட்டிக்காட்டினார். பாஜ ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களுக்குள் நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லை வேலிகள் அமைக்கும் பணி நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் விசாரணை சந்தித்து வரும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற துணிச்சல் மம்தா பானர்ஜிக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.
“தாய், மண், மக்கள்” என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி அரசில், இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், நிலங்கள் ஊடுருவல்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தை பாதுகாக்க பாஜ ஆட்சி அவசியம் என்றும், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி கனவு கண்ட வளமான மேற்கு வங்கத்தை உருவாக்குவோம் என்றும் அமித் ஷா கூறினார்.
