ஈரான் மற்றும் இஸ்ரேல்–அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி வழங்க இத்தாலி முன்வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்காசியாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆறாவது நாளாக தொடரும் இந்த மோதலில் இரு தரப்பினரும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஈரானின் போர்க்கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் ஈரான் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மேற்காசியா முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வளைகுடா நாடுகள் நமது நட்பு நாடுகள் என்பதற்காக மட்டுமல்லாமல், அந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் வசித்து வருவதும் முக்கிய காரணம் என தெரிவித்தார். மேலும் அங்கு பணியில் இருக்கும் சுமார் 2,000 இத்தாலிய வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
