புதுடில்லி: மும்பை தாக்குதல் பாணியில் கடல் வழியாக மீண்டும் ஊடுருவி தாக்குதல் நடத்தப் போவதாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட மிரட்டல் வீடியோ பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கையில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து குஜராத் முதல் கேரளா வரையிலான அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட “ஆப்பரேஷன் சிந்துார்” நடவடிக்கையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பல பயங்கரவாத முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் சைபுல்லா கசூரி வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், “வான்வெளியைத் தொடர்ந்து கடல் வழியிலும் ஆதிக்கம் செலுத்துவோம்” என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், இந்த வகை மிரட்டல்கள் பெரும்பாலும் அமைப்பினருக்கு உற்சாகம் அளிப்பதற்கும், புதிய ஆதரவாளர்களை ஈர்ப்பதற்குமான முயற்சியாக இருக்கலாம். எனினும், கடல் வழி பாதுகாப்பு தொடர்பாக எந்தவித தளர்வும் காட்டப்படாது என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு படைகள், கடற்படை மற்றும் உளவுத்துறை அமைப்புகள் ஒருங்கிணைந்து அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
