முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
சென்னை:
நாட்டு நடப்பு குறித்து புரிதல் இல்லாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே வாசிக்கும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பதாக, பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், தினந்தோறும் புதிய நாடகங்களை நடத்திக் கொண்டு ஆட்சி நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார். நாட்டு நிலவரம் குறித்து அறியாமல், எழுதிக் கொடுக்கப்படும் கருத்துகளை கிளிப்பிள்ளை போல மீண்டும் சொல்லும் நிலை முதல்வரிடம் காணப்படுவதாக அவர் கூறினார்.
சமக்ரா ஷிக்ஷா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவதாக முன்பே கடிதம் மூலம் தெரிவித்து விட்டு, பின்னர் அதில் மாற்றம் செய்ததற்கான காரணம் என்ன என்றும், நிறைவேற்றாத திட்டத்திற்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொகுதி மறுசீராய்வு தொடர்பாக, தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2025 பிப்ரவரி மாதமே தெளிவுபடுத்தியுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார். முதல்வருக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லையா, அல்லது அவருக்காக எழுதிக் கொடுப்பவர்களுக்கும் தகவல் இல்லையா எனவும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ள நிலையில், கவர்னர் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா என்றும், நிர்வாகத் தோல்விக்கு தொடர்ந்து கவர்னரை குற்றம் சாட்டுவதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டினார். மத்திய அரசு தற்போது அந்த திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ள நிலையில், இனிமேல் அந்த திட்டத்தில் ஊழல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாலேயே முதல்வர் இவ்வாறு பேசுகிறார் என்றும் அவர் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருவதாகவும், வேங்கைவயலுக்குச் செல்லாத முதல்வர், குறைந்தபட்சம் மதுரைக்கு சென்று நிலவரத்தைப் பார்த்திருக்கலாமே என்றும் அண்ணாமலை விமர்சித்தார். இந்த ஆண்டே மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஒரு செங்கல்லாவது வைக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்கியிருந்தும், ஆண்டுதோறும் சென்னை வெள்ளத்தில் மூழ்குவது தான் மாநில அரசின் சாதனையாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தவறான திட்ட அறிக்கைகளை அரசு அறிந்தே வழங்கியதாகவும், திருத்தப்பட்ட அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் உள்ளதா என்றும் அவர் கேட்டார்.
கீழடி ஆய்வறிக்கையை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல மேலும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் தேவை என மத்திய அரசு கூறி வரும் நிலையில், அந்த ஆதாரங்களை வழங்குவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வை தமிழக மக்கள் எதிர்க்கவில்லை என்றும், ஏழை மற்றும் எளிய மாணவர்களுக்கு நீட் ஒரு வாய்ப்பாக இருப்பதை ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களே கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக மருத்துவக் கல்வி இடங்களை விற்று லாபம் ஈட்டிய திமுக தரப்புக்கே நீட் தேர்வு சிரமமாக உள்ளது என்றும், இனியாவது மக்களுக்கான அரசியலை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
