மு.க. ஸ்டாலின் அறிவிப்பு: அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் ரொக்கப்பரிசு
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. அதன்பின், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஆனால் 2025-ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டு, ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால், 2026 பொங்கலுக்கு ரொக்கப்பணம் வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையே, 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது.
இந்த அறிவிப்பால், ரொக்கப்பணம் வழங்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் எவ்வளவு ரொக்கப்பணம் வழங்குவது என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு விளக்கம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் திருநாள் என்பது சூரியன், விவசாயிகள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு நன்றி கூறி உலகத் தமிழர்கள் பாரம்பரியமாகக் கொண்டாடும் உன்னத விழா என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்மூலம் 2,22,91,710 குடும்பங்கள் பயனடையும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே, ரூ.3,000 ரொக்கப்பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி–சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
