சென்னை: தேர்தல் காலத்தில் மட்டுமே மாநில சுயாட்சி குறித்து பேசுவதாக ஸ்டாலினை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்தார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், இன்று பல்லாவரம் மற்றும் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி தொண்டர்கள் முன்னிலையில் குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுகக்கு எதிராக வலுவான சக்தி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தேர்தல் நேரத்தில் மட்டும் வீர வசனங்கள் பேசப்படுகின்றன என்றார்.
நீட் விலக்கு பெற முடியவில்லை என்றும், சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தேவை என கூறப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார். திமுக மத்தியில் 15 ஆண்டுகள் இருந்தபோது மாநில சுயாட்சி குறித்து ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார். தேர்தல் வந்தால் மாநில சுயாட்சி பேசுவார்கள், தேர்தல் முடிந்தால் அதை மறந்து விடுவார்கள் என்றார். மாநில சுயாட்சி மீது உண்மையான விருப்பம் இருந்தால் மத்திய ஆட்சியில் இருந்தபோதே பெற்றிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் நேரு துறையில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை மூன்று முறை கடிதம் அனுப்பியதாக கூறிய அவர், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். சட்டப்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தன்னை துரோகி என கூறுவதாகவும், ஆனால் மக்களை ஏமாற்றுவதே துரோகம் என்றும் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு குறித்து சிந்திக்க வேண்டும் என்றும், அதை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் இல்லை என்றார்.
திட்டங்கள் அறிவிக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அவை நடைமுறைக்கு வரவில்லை என்றும் கூறினார். 52 குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும், அவற்றின் அறிக்கை குறித்து தெளிவு இல்லை என்றும் குறிப்பிட்டார். வேலைவாய்ப்பு அதிகரித்ததாக கூறப்படுவது உண்மையல்ல என்றும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 12 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 36 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாகவும் கூறப்படுகின்றது. 77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
லேப்டாப் போன்ற திட்டங்கள் கல்வி தொடங்குவதற்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்றும், பின்னர் வழங்குவதால் பயன் இல்லை என்றும் கூறினார். தேர்தல் அச்சத்தில் இத்தகைய அறிவிப்புகள் செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.
இவ்வாறு இபிஎஸ் உரையாற்றினார்.
