மருதமலையில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதி இல்லை – உயர் நீதிமன்றம்
சென்னை:
கோவை மாவட்டம் மருதமலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில், 500 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வரம்புக்குள் முருகன் சிலை அமைப்பதும் அனுமதிக்க இயலாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை வனப்பகுதியில் அமைந்துள்ள மருதமலை, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாகும். நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள் இந்த பாதையை பயன்படுத்தி வருவதால், சுற்றுச்சூழல் ரீதியாக இந்த பகுதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், மருதமலையில் 110 கோடி ரூபாய் செலவில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டதை எதிர்த்து, சென்னை கோட்டூர் கார்டன் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டிபரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சிலை அமைக்கப்பட உள்ள இடம், பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த முழுமையான விபரங்களுடன் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதேபோல், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட அமிக்கஸ் கியூரி மூத்த வழக்கறிஞர்கள் குழுவும், சிலை அமைய உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.
அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு செய்த பிறகு நீதிபதிகள் கூறியதாவது: வனவிலங்குகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் முருகன் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பரிந்துரைக்கப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருகிறது.
இந்த இடத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டால், அதை பார்வையிட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பக்தர்கள் வருவதால், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற விதிமுறை ஏற்கனவே உள்ளது.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், நிறுவப்படவுள்ள முருகன் சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட மாட்டாது என்றும், பக்தர்கள் சிலையை சுற்றி வலம் வந்து தரிசிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 437 மீட்டருக்கு அப்பால் உள்ள இடத்தில் சிலையை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், வனத்துறை விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்றும் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து குறைந்தது 500 மீட்டருக்கு அப்பால் மாற்று இடத்தை கண்டறிந்து, அதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
