கேப் கனாவெரல்: கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அழைத்து செல்லும் முயற்சியாக, **நாசா**வின் ஆர்டெமிஸ்–2 விண்கலத்திற்கான ‘கவுன்ட் டவுன்’ ஒத்திகை துவங்கப்பட்டுள்ளது.
1972ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நிலவுக்குச் செல்லவுள்ள ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளை சோதிக்கும் இரண்டு நாள் கவுன்ட் டவுன் ஒத்திகை நேற்று முன்தினம் தொடங்கியது.
மனிதர்களை சுமந்து செல்லும் ராக்கெட் மற்றும் விண்கலம் முழுமையாக பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தும் கடைசி மற்றும் மிக முக்கியமான சோதனையாக இந்த ஒத்திகை கருதப்படுகிறது. ஏவுதலுக்கு முன் அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் சரியாக செயல்படுகிறதா என்பதும், இந்த ஒத்திகையின் போது உறுதி செய்யப்படும்.
இன்ஜின்களை இயக்காமல், ஏவுதலுக்கு முன் செய்ய வேண்டிய மற்ற அனைத்து பணிகளும் ஒருமுறை ஒத்திகையாக நடத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இந்த சோதனையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு, நிலவுக்கு செல்லவுள்ள நான்கு விண்வெளி வீரர்களின் பயணம் எப்போது தொடங்கும் என்பது தீர்மானிக்கப்படும்.
நிலவுக்கு செல்லவுள்ள கமாண்டர் ரீட் வைஸ்மேன் மற்றும் அவரது குழுவினர், கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கவுன்ட் டவுன் ஒத்திகை வெற்றிகரமாக முடிந்தால், வரும் 8ம் தேதி விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அப்பல்லோ திட்டத்தின் கீழ் 1968 முதல் 1972 வரை 24 விண்வெளி வீரர்களை நாசா நிலவுக்கு அனுப்பியுள்ளது. அவர்களில் 12 பேர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளனர்.
