அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பை சேர்ப்பது குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தல் அறிக்கையை தயாரிக்க, 10 பேர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்துள்ளார். இந்தக் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து, பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டுள்ளது. குறிப்பாக, ‘டாஸ்மாக்’ கடைகளை மூட வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டாஸ்மாக் தொடர்பாக தெளிவான முடிவை எடுக்க முடியாத வகையில், அ.தி.மு.க. தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பூரண மதுவிலக்கு அல்லது படிப்படியான மதுவிலக்கு என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது குறித்து, மூத்த நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பூரண மதுவிலக்கு வாக்குறுதியை அளித்த திராவிட முன்னேற்ற கழகம்க்கு, அந்த வாக்குறுதி நெகட்டிவாக அமைந்தது என்றும், அதனால் 2021 தேர்தலில் தி.மு.க. மதுவிலக்கு வாக்குறுதியை கைவிட்டது என்றும் மூத்த நிர்வாகிகள் எடுத்துக்காட்டியுள்ளனர். எனவே, அந்த வாக்குறுதியை அளிக்க வேண்டாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், டாஸ்மாக் வழியாக ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்றும், டாஸ்மாக் மூடப்பட்டால் மாற்று வருவாய் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் சில சீனியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வருவாயை அதிகரிக்க குஜராத் மாடலில் தொழில்துறை சார்ந்த மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இத்தகைய அறிவிப்புகள் பிரதமர் நரேந்திர மோடி வாயிலாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், மதுவிலக்குக்கு ஆதரவாக உள்ள சீனியர்கள் பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பழனிசாமி முடிவெடுக்க முடியாமல் தவித்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
