திருப்பூர்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிக்கு திமுக அரசு அதிகபட்ச தாமதம் செய்ததாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
திருப்பூரில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஐரோப்பிய யூனியனுடன் கையெழுத்தாகியுள்ளது. இந்த இரண்டும் மிக முக்கியம். இதனால் திருப்பூர் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை காணும். 5 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு உருவாகும். ஏற்றுமதி 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.
கேசவ விநாயகன் நீண்டகாலமாக பணி செய்த அமைப்பு பொதுச்செயலாளர். பல தேர்தல்களை சந்தித்துள்ளார். கடுமையாக உழைக்கும், எளிமையாக வாழும் நபர். அவர் ஆர்எஸ்எஸ் பிரசாரகராக இருந்தார். அவரை அமைப்பில் இருந்து மாற்றி வேறொரு பொறுப்பு வழங்கியுள்ளனர். கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தமிழகத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் இல்லாதது புதிய விஷயம் இல்லை. திறமைவாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர். அவரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். அவர் அரசியல்வாதி அல்ல. அவர் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அந்த மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டாரா? முதல்வர் கீழ் மதுரை வராதா? எத்தனை முறை மதுரை சென்றுள்ளார்? மருத்துவமனையில் நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டு இருக்கலாம். தாமதம் இருந்தால் அமைச்சரை அழைத்து பேசியிருக்கலாம். எய்ம்ஸ் வரக்கூடாது என்பதற்காக நான்கு ஆண்டுகளாக வேலை செய்தார்.
மரம் வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை. மரத்தை வெட்ட லைசென்ஸ் வழங்க ஒன்றரை வருடம் தாமதம் ஏற்பட்டது. நிலம் எடுக்க தாமதம் ஏற்பட்டது. மாநில அரசு எவ்வளவு தாமதம் செய்ய முடியுமோ அவ்வளவு தாமதம் செய்தது. பஞ்சாயத்து முதல் அனைத்து துறைகளையும் பயன்படுத்தினர். அவற்றை தாண்டி எய்ம்ஸ் நிற்கிறது. மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாமல் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளது. சட்டசபையிலும் மேடையிலும் மட்டும் பேசும் அக்கறை இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
தேஜ கூட்டணி விரிவடைந்து வருகிறது. இன்னும் நாட்கள் உள்ளன. கூட்டணியில் சேராத கட்சிகள் திமுகவை வீழ்த்தும் நோக்கில் தேஜ கூட்டணியில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நயினாருக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை. கட்சி வழங்கும் பணிகளை செய்து வருகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
