மது போதையும், மத போதையும் தமிழகத்திற்குள் வரவிடக் கூடாது: வைகோ நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின்
திருச்சி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “2026-ல் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான். தமிழகத்தில் தனது காலடி படாத இடமே இல்லை என்ற அளவிற்கு, மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. இளைஞர்களுக்கு நல்வழிகாட்ட, இளைஞர்களுடன் இணைந்து சமத்துவ பயணம் மேற்கொள்ளும் அவருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்தார்.
மேலும், மறைந்த மு.கருணாநிதி அருகில் இருந்து அரசியல் கற்றுக் கொண்டவர் வைகோ என்றும், மதுரையிலிருந்து திருச்சிக்கு நீதி கேட்டு கலைஞர் மேற்கொண்ட நடைபயணத்தில் உடன் பயணித்தவர் வைகோ தான் என்றும் நினைவுகூரினார். “திராவிட இயக்க பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் நானும் வைகோவும்” எனவும் ஸ்டாலின் கூறினார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய முதல்வர், போதைப்பொருள் கடத்தல் என்பது மிகப் பெரிய நெட்வொர்க் என்றும், இதை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்வுடன் படைப்புகளை வழங்க வேண்டும் என்றும், போதைப் பழக்கத்தைப் புகழும் காட்சிகள் சமூகத்தை சீரழிக்கும் என்றும் எச்சரித்தார். பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை பரப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், நாட்டில் மத மோதல்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறிய ஸ்டாலின், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அச்சத்துடன் வாழும் சூழல் உருவாகி வருவது கவலை அளிப்பதாக தெரிவித்தார். “மது போதையையும், அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக, வைகோவின் சமத்துவ நடைபயணம் வெற்றி பெற வாழ்த்திய முதல்வர், “உங்களின் நோக்கம் பெரியது என்றாலும், உங்களின் உடல்நிலை அதைவிட முக்கியம். மிகுந்த கவனத்துடன் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்; இனி இதுபோன்ற கடுமையான நடைபயணங்களை மேற்கொள்ளக் கூடாது” என உரிமையுடன் கோரிக்கை வைத்தார்.
