மசூதி இடிக்கப்படுவதாக தவறான தகவல்: டில்லியில் பதற்றம், கல் வீச்சு
புதுடில்லி: டில்லியில் மசூதி இடிக்கப்படுவதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து, அப்பகுதியில் கூடிய கூட்டம் போலீசார் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ஐந்து போலீசார் காயமடைந்த நிலையில், சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராம்லீலா மைதானத்தை ஒட்டிய பைஸ்-இ-இலாஹி மசூதி மற்றும் துர்க்மான் கேட் அருகே உள்ள பகுதிகளில், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மசூதி இடிக்கப்படுவதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, கூட்டம் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதனால், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் நிதின் வல்சன் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், முதற்கட்ட விசாரணையில் வதந்தியே கலவரத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார். வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட திருமண மண்டபம், மருந்தகம் மற்றும் சில வணிக வளாகங்கள் மட்டுமே இடிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி துணை ஆணையர் விவேக் குமார் விளக்கம் அளித்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் மசூதி இடிக்கப்படுவதாக வீடியோ பதிவிட்ட காலித் மாலிக் என்பவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
