மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாகவும் திறம்படவும் மேற்கொள்ள, மாநில முதல்வர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த திட்டமிட்ட மத்திய அரசின் முடிவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் விரிவான மற்றும் நம்பகமான தரவுகள் கிடைக்கும் என்றும், அதன் அடிப்படையில் நலத்திட்டங்கள் உரிய பயனாளர்களை சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள ஜாதிய அமைப்புகள் மற்றும் சமூக கட்டமைப்புகளில் காணப்படும் வேறுபாடுகளை கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாட்டு திட்டங்களை இறுதி செய்யும் முன், மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், அதற்காக மாநில முதல்வர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
