சென்னை: “மக்களிடம் சினிமாவுக்கும் மதுவிற்கும் செலவிட பணம் இருக்கும்போது ஏன் இலவசங்கள் வழங்க வேண்டும்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த தேர்தலில் இருந்த கூட்டணியுடன் மேலும் இருவரை சேர்த்ததால் திமுகவுக்கு கூடுதல் பயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிகிறது. நல்ல ஆட்சி வழங்கும் கட்சி என்றால் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும்?
நல்ல ஆட்சி வழங்கினால் யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஓட்டுக்காக பணம் வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. குடும்பத் தலைவியருக்கு ரூ.5,000 வழங்க வேண்டிய நிலையும் இருக்காது. பத்து கட்சிகளை சேர்த்து பெற்ற வெற்றியால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது?
திராவிட கட்சிகளின் தொடர்ச்சியே நடிகர் விஜய். அவருக்கென தனித்த தத்துவம், பாதை அல்லது கொள்கை எதுவும் இல்லை. சினிமாவையும் சித்தாந்தத்தையும் ஒன்றாக கலந்து குழப்பக்கூடாது.
முன்பு அரை சவரன் கொடுத்தனர். தற்போது ஒரு சவரன் வழங்குகிறீர்கள். முதல்வர் ஸ்டாலின் ரூ.1,000 வழங்கினார். பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000 வழங்குவேன் என்கிறார்.
இது திரைப்பட நகைச்சுவை காட்சியைப் போன்றதாக உள்ளது. 1,000, 2,000, 3,000, 4,000 என சொல்லிக்கொண்டே போய் கடைசியில் ‘பிம்பிலிக்கா பிளாப்பி’ போல முடிவடையும். அது எப்போது ‘பிளாப்’ ஆகப்போகிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
இலவசங்களை வழங்குவதற்குப் பதிலாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. அதை நாங்கள் கூறினாலும் யாரும் கவனிப்பதில்லை.
ஒரே நாளில் மக்கள் மதுக்காக 760 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுகின்றனர். நடிகர் விஜய் படம் வெளியானால் முதல் நாள் முதல் காட்சி வசூல் மட்டும் 34 கோடி ரூபாயாக இருக்கிறது.
பொழுதுபோக்கும் மதுவுக்கும் செலவிட பணம் உள்ளவர்களுக்கு ஏன் இலவசங்கள் வழங்க வேண்டும்? மக்களின் அறிவையும் உடல் ஆற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நாடு தான் வளர்ச்சி அடையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
