மகனை இழந்த வேதாந்தா அனில் அகர்வால் உருக்கம்: “75% வருமானம் சமூக சேவைக்கே”
மும்பை:
நாட்டின் முக்கிய தொழில் குழுமங்களில் ஒன்றான Vedanta நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தனது மகன் அக்னிவேஷ் அகர்வாலை இழந்த துயரத்தில் உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி தான் சம்பாதிக்கும் வருமானத்தில் 75 சதவீதத்தை சமூக சேவைகளுக்காக வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனிம உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் வேதாந்தா குழுமம், காப்பர், அலுமினியம், ஜிங்க், இரும்பு உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் காப்பரும் இந்த குழுமத்துக்குச் சொந்தமானது.
மகன் அக்னிவேஷ் மறைவு
அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் (49), அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து அனில் அகர்வால் தனது சமூக வலைதள பதிவில், “என் வாழ்க்கையின் மிக இருண்ட நாள் இது. என் மகன் என் நண்பனும், பெருமையும், உலகமும்,” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
75% வருமானம் சமூக சேவைக்கு
மேலும் அவர், “நான் சம்பாதிப்பதில் 75%ஐ சமூகத்திற்கு திருப்பித் தருவேன் என்று அக்னிவேஷிடம் உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை இன்று மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். இனி எளிமையான வாழ்க்கையை தேர்வு செய்து, சமூக சேவைகளுக்காகவே அதிகமாக செலவிடுவேன்,” என தெரிவித்துள்ளார்.
அக்னிவேஷ் யார்?
1976 ஜூன் 3ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த அக்னிவேஷ், ராஜஸ்தான் அஜ்மேரில் உள்ள மேயோ கல்லூரியில் கல்வி பயின்றவர். பின்னர் ஃபியூஜெரா கோல்ட் நிறுவனத்தை தொடங்கி, ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
அவரின் மறைவுக்கு நரேந்திர மோடி பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்த எதிர்பாராத இழப்பு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன்,” என அவர் பதிவிட்டுள்ளார்.
