மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான **மெக்சிகோ**வில், சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (சி.ஜே.என்.ஜி.) தலைவன் ‘எல் மெஞ்சோ’ என அறியப்படும் நெமேசியோ ஓசெகுவேரா செர்வாண்டஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் பதிவாகின.
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், மெக்சிகோ ராணுவம் சிறப்பு நடவடிக்கையில் இறங்கியது. சிறப்பு படைகள் மற்றும் விமானப்படை உதவியுடன், எல் மெஞ்சோவை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
விசாரணையில், அவர் ஜாலிஸ்கோ மாகாணத்தின் தபால்பா நகரில் பதுங்கியிருப்பது பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டது. தொடர்ந்து ராணுவம் சுற்றிவளைத்தபோது, கார்டெல் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்த மோதலில் எல் மெஞ்சோ உட்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்த அவரை **மெக்சிகோ சிட்டி**க்கு விமானம் மூலம் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரர்களும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை ராணுவ வாகனங்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தானவை என கூறப்பட்டது.
தலைவர் உயிரிழந்த செய்தி வெளியாகியதும், சி.ஜே.என்.ஜி. அமைப்பினர் பல பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜாலிஸ்கோ மாகாணத்தில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அண்டை நாடான குவாத்தமாலாவும் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தியது.
இந்நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். வன்முறை சம்பவங்கள் இருந்தாலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் மாகாண அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அரசு உறுதி அளித்துள்ளது.
