பேச்சில் இல்லை, களத்தில் வேலை செய்ய வேண்டும்: பாஜ தொண்டர்களுக்கு ரங்கராஜ் பாண்டே அழைப்பு
கோவை:
பாஜவை கூட்டணியில் வைத்ததால் தான் வெற்றி கிடைத்தது என்ற எண்ணம் அதிமுகவுக்கு உறுதியாக உருவாக வேண்டும் என பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற பாஜ தொழில் வல்லுனர் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பது களத்தில் செய்யப்படும் மைக்ரோ மேனேஜ்மென்ட் தான் எனக் கூறினார். ஒரு செயல்வீரர் குறைந்தது 15 பேரையாவது ஓட்டுப்போட அழைத்துச் சென்றால், அதுவே கட்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என்றார்.
திருமங்கலம் பார்முலாவை குறிப்பிட்ட அவர், யார் ஓட்டு போட்டார்கள், யார் போடவில்லை என்பதை பூத் அளவில் கணக்கிட்டு அனைவரையும் ஓட்டுப்போட வைப்பதே உண்மையான அரசியல் உழைப்பு என விளக்கினார். எஸ்ஐஆர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த கூடுதல் முயற்சி தேவை என்றும் கூறினார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக 80 கோடி மக்களுக்கு விலை இல்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ள உண்மையை மக்களிடம் எடுத்துச் செல்லத் தவறியுள்ளதாக அவர் விமர்சித்தார். இந்த உதவிகளை மாநில அரசு வழங்கியதாக மக்கள் நினைப்பது தவறான புரிதல் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கூட்டணி அரசியலை சுட்டிக்காட்டிய ரங்கராஜ் பாண்டே, தனித்து நின்றால் வெற்றி பெற முடியாத கட்சிகளே கூட்டணியின் பலத்தால் எம்எல்ஏக்கள், எம்பிக்களை பெற்றுள்ளன என்றார். அதிமுக–பாஜ கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவற்றை அனைத்தையும் வெற்றி பெறச் செய்வதே பாஜ செயல்வீரர்களின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“பாஜவை கூட்டணியில் சேர்த்ததால் தான் வெற்றி கிடைத்தது என்ற நிலை உருவாக வேண்டும். அதற்காக பேச்சில் அல்ல, களத்தில் செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
