புதுடில்லி: தமிழகம் – கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பெண்ணையாறு நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண, ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகும் இந்த நதி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. தமிழகத்தில் இந்த நதி ‘பெண்ணையாறு’ என அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில், இந்த நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிகளில் அந்த மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “நதி நீர் என்பது ஒரு தேசிய சொத்து. அதன் மீது எந்தவொரு மாநிலமும் தனிப்பட்ட உரிமை கோர முடியாது” என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாத காலத்துக்குள் மத்திய அரசு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்றம் அமைப்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் முதன்மையான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த உத்தரவு தமிழகத்திற்கு சட்ட ரீதியாக கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
