புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கான பயணத்தில் இந்த பட்ஜெட் வலுசேர்க்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கானது. இதில் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில் நாட்டின் தொழில்துறையின் முன்னேற்றத்திற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
முக்கியத்துவம்
140 கோடி மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வளர்ச்சி நிறைந்த இந்தியா என்ற பயணத்திற்கு இது வலுசேர்க்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றார்.
மேலும், இளைஞர்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்றும் கூறினார். மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப்போகிறது என்றும், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என்றும் தெரிவித்தார். நாட்டு மக்களின் தொழில் திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலம்
பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட், 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்திற்கான அடித்தளமாகும் என்றும், இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை இது வலுப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
