சென்னை: புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை – பெங்களூரு ஒரு மணி நேரம் 13 நிமிடங்களிலும், சென்னை – ஹைதராபாத் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களிலும் பயணம் செய்ய முடியும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.93 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதில் தெற்கு ரயில்வேக்கு மட்டும் ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இது முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் ஒன்பது மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார்.
முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஏழு வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதில் தெற்கு ரயில்வேயில் சென்னை–பெங்களூரு மற்றும் சென்னை–ஹைதராபாத் வழித்தடங்கள் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் என்பதால் இந்த வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்த புல்லட் ரயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாகவும், திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை–பெங்களூரு ஒரு மணி நேரம் 13 நிமிடங்களிலும், சென்னை–ஹைதராபாத் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களிலும் செல்ல முடியும் என்றும் அவர் விளக்கினார்.
தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் அமைக்கும் திட்டங்களுக்கு மொத்தம் 4,326 ஹெக்டர் நிலம் தேவைப்படுவதாகவும், இதுவரை தமிழக அரசு 1,052 ஹெக்டர் நிலம் மட்டுமே வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மொத்த தேவையில் 24 சதவீதம் அளவிற்கே நிலம் கையகப்படுத்தி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ரயில் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற போதிய நிலத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மன்னார்குடி–பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர்–பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு இன்னும் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பட்ஜெட்டைவிட அதிக நிதி ஒதுக்கீடு
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார் மற்றும் சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் ஆகியோர் அளித்த பேட்டியில், கடந்த மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், கேரளா ரயில்வே திட்டங்களுக்கு ரூ.3,795 கோடி என மொத்தமாக ரூ.11,406 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மற்றும் அகல் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். புதிய ரயில் பாதை பணிகளுக்கான நிலம் கையகப்படுத்த தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
சென்னையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
