சென்னை:
ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் குறித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் க. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கே எனவும், எந்த நபரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை தாக்குவதற்கோ, அவமதிப்பதற்கோ காவல்துறைக்கு உரிமை இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன என்றும், இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை பணிகள், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இந்த தொழிலாளர்களின் உழைப்பின் மீதே சார்ந்துள்ளன எனவும், அவர்களுக்கு பாதுகாப்பும் கண்ணியமும் வழங்குவது மாநில அரசின் கடமை என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
