புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ‘இண்டி’ கூட்டணி அமைந்துள்ளதாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
புதுச்சேரியில் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் அரசை அமைக்கும் நோக்கில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளன. இதற்காக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஏழு பேர் கொண்ட அதிகாரப்பூர்வ குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தும்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் மாநிலத்தின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் புதுச்சேரியின் துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கிய சொத்துக்கள் அதானி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக தலைமையில் ‘இண்டி’ கூட்டணி செயல்பட்டு வருவது போலவே, புதுச்சேரியிலும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையும் என்று கூறினார்.
இதற்காக தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்கு தங்களது குழுவை அனுப்புமாறு திமுக தலைமையிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டணி என்பது தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் நலனுக்காக தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம்.
சென்னையில் திமுக தலைமையுடன் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த பிறகே கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று கிரீஷ் ஷோடங்கர் கூறினார்.
