புதுடில்லி: டில்லியில் புதிய பிரதமர் அலுவலகமான ‘சேவா தீர்த்’ கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் செயல்பட உள்ளது.
2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பு ஏற்ற பிறகு, காலனித்துவ அடையாளங்களை மாற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மத்திய அமைச்சரவை செயலகம் கர்தவயா பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜபாதை சீரமைக்கப்பட்டு கர்தவயா பாதை என பெயர் சூட்டப்பட்டது. ரேஸ் கோர்ஸ் சாலைக்கு லோக் கல்யாண் மார்க் எனவும், கவர்னர் மாளிகைகள் லோக் பவன்கள் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1900ஆம் ஆண்டு டில்லி சவுத் பிளாக்கில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை பிரிட்டன் கட்டடக் கலைஞர் ஹெர்பெர்டி பாகர் வடிவமைத்தார். இதில் பிரதமர் அலுவலகம், ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்பட்டு வந்தன.
இந்த அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘சேவா தீர்த்’ வளாகத்துக்கு மாற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலக புதிய கட்டடம் மற்றும் மத்திய செயலக கட்டடங்களான கர்தவயா பவன் 1 மற்றும் 2 ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைத்தார்.
1921ஆம் ஆண்டு முதல் சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் செயல்பட்டு வந்த அனைத்து அரசு அலுவலகங்களும் காலி செய்யப்படுகின்றன. பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.
