புதுடில்லி: தமிழகத்தின் அடுத்த டிஜிபி நியமனத்துக்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வைத் தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கிஷோர் கிருஷ்ணசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொறுப்பு டிஜிபி நியமனம் அரசின் தவறு என்றும், புதிய டிஜிபி நியமனம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு கடைபிடிக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கையில், டிஜிபி பதவிக்கான சில பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், யுபிஎஸ்சியில் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. டிஜிபி இல்லாத காரணத்தால் தேர்வுக்குழுவில் கூடுதல் உள்துறை செயலாளரை இணைக்க கோரியிருந்ததாகவும், அதனை யுபிஎஸ்சி ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், டிஜிபி தேர்வு செய்யப்படுபவர் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமை செயலாளர். மற்றொருவர், டிஜிபி இல்லாதபட்சத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர் குழுவில் இடம்பெற வேண்டும். டிஜிபி தேர்வு செய்யப்படுபவர் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி தமிழகத்திற்கு தளர்த்தப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கான பெயர் பட்டியலை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த பட்டியலை பரிசீலித்து 2 வாரங்களுக்குள் யுபிஎஸ்சி புதிய டிஜிபி பெயரை தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
