புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி உடன் இருக்கும் ஏஐ படத்தை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் படத்தில் ‘ஆமாம், இது ஏஐ படம்’ எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனுடன் அவர் வெளியிட்ட பதிவில், “நண்பர்கள் சந்திக்கும் போது புதுமை உருவாகும். ஏஐ மாநாட்டுக்கு தயார்” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டதும், ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருவதுடன், படம் வேகமாக வைரலாகியுள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், மேக்ரான் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர். புதுமை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘இந்தியா – பிரான்ஸ் இயர் ஆப் இனோவேஷன் 2026’ திட்டத்தையும் இருவரும் துவக்கி வைத்தனர்.
மேலும், கர்நாடக மாநிலம் வேமகலில், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் மற்றும் ஏர்பஸ் இணைந்து அமைத்துள்ள எச்125 இலகு ரக ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, டில்லியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மேக்ரான் பங்கேற்றார். டில்லியில் உள்ள பாரத மண்டபம் வளாகத்தில் நடைபெறும் ஏஐ மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
