புதுச்சேரி: வரும் 12-ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இதனை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜ.க. நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. வரும் தேர்தலிலும் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. – அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. என்.ஆர். காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட திட்டமிட்டு வருகிறது.
இந்த சூழலில், வரும் 11 அல்லது 12-ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. சார்பில் லாஸ்பேட்டையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க. மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான் உள்ளிட்டோர் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் மற்றும் தாகூர் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, பிரதமரை மேடைக்கு அழைத்து செல்லும் வழி, கூட்டணி கட்சி முக்கிய தலைவர்கள் செல்லும் பாதை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். பொதுக்கூட்டத்தின் போது முன்னணி நிர்வாகிகள் அமர வேண்டிய இடங்கள், பொதுமக்கள் அமர்விடம், வாகனங்கள் நிறுத்தும் பகுதிகள் குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது.
இருப்பினும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இடம் இறுதியானதும், டி.ஜி.பி. ஷாலினிங் சிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத் தொடர்ந்து, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி இடத்தை மத்திய பாதுகாப்புப் படையினரும் ஆய்வு செய்ய உள்ளனர்.
