திருப்பத்தூர்: ஒரு பிரச்னையை சந்திக்கும் திறன் கூட விஜய்க்கு இல்லை. அவர் தேர்தலை சந்திக்கட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நிருபர்கள் சந்திப்பில், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் வளர்த்த கட்சி சரண்டர் அடைந்துவிட்டது என விஜய் கூறியுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது: அவருக்கு என்ன தெரியும். ஒரு பிரச்னை நடந்தபோது 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. தலைவரானால் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். கட்சி தொடங்கிய பிறகு நிருபர்கள் மற்றும் மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது கட்சி தலைவரின் கடமை.
15 நாட்கள் அலுவலகத்தையே மூடிவிட்டனர். ஒரு பிரச்னையை சமாளிக்கும் திறன் கூட இல்லாத நிலையில், எவ்வாறு கட்சி நடத்தி மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு; யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்கள்தான் எஜமானர்கள்.
மக்கள் வழங்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு. இன்னும் ஒரு முறை கூட விஜய் தேர்தலை சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்தால்தான் நிலைமை தெரியும். தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு உடையவர்கள்.
தமிழகம் உயர்ந்த நிலைக்கு சென்றதற்கு காரணம் அதிமுக ஆட்சி. அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பல கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை கிடைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.
