பாராமதி அருகே விமான விபத்து: துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 6 பேர் பலி
மஹாராஷ்டிர அரசியல் வட்டாரங்களை உலுக்கிய சம்பவமாக, மும்பையிலிருந்து பாராமதி நோக்கி புறப்பட்ட சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அஜித் பவார் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், பாராமதி பகுதியில் தரையிறங்க முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் தரையில் மோதிய சில நொடிகளில் தீப்பற்றியதால், முழுப் பகுதியும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, நீண்ட நேரம் போராடி மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும் விமானத்தில் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் அஜித் பவாருடன் அவரது தனிப்பாதுகாவலர் மற்றும் இரு விமான ஓட்டிகளும் அடங்குவர்.
பாராமதியில் நடைபெற இருந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் மரண செய்தி தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், உடல் நலம் குன்றி மும்பை இல்லத்தில் ஓய்வில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த தலைவர் சரத் பவார், தனது மனைவி பிரதிபா பவாருடன் பாராமதி நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது மகள் சுப்ரியா சுலேவும் அங்கு சென்று கொண்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
1959 ஜூலை 22 அன்று அகமதுநகர் மாவட்டம் தியோலலி பிரவராவில் பிறந்த அஜித் பவார், மஹாராஷ்டிர அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட தலைவராக அறியப்பட்டவர். 1991 முதல் பார்லிமென்ட் மற்றும் சட்டசபை உறுப்பினராக செயல்பட்டு வந்த அவர், பாராமதி சட்டசபை தொகுதியை 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வென்றுள்ளார். மாநில அரசில் ஆறு முறை துணை முதல்வராக பதவி வகித்துள்ள அவர், நிர்வாகத் திறன் கொண்ட அரசியல் தலைவராக கருதப்பட்டார்.
அவரது மனைவி சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளை முடிவுக்கு கொண்டு வந்து, கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது.
