பாதுகாப்புப் படையினர் சிதறல்; கமேனி ஆட்சி விரைவில் வீழும் – ரெசா பஹலவி அறிவிப்பு
மேற்கு ஆசிய நாடான ஈரான்-இல், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார சீர்குலைவு, பணமதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக தொடங்கிய இந்த போராட்டம், தற்போது ஆட்சியை நேரடியாக சவால் செய்யும் நிலைக்கு வளர்ந்துள்ளது.
போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புப் படையினர் கடும் நெருக்கடியில் உள்ளனர். இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 538 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெஹ்ரான், மஷ்ஹத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் “கமேனி ஆட்சி ஒழிக” என்ற முழக்கங்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.
ஈரானுக்கு வெளியிலும் வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்தில், 1979-க்கு முந்தைய ‘சிங்கம் – சூரியன்’ கொடி ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள ஈரான் முன்னாள் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி, வீடியோ மூலம் ஈரான் மக்களுக்கு முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “லட்சக்கணக்கான மக்களை எதிர்கொள்ளும் சக்தி தற்போது பாதுகாப்புப் படையினரிடம் இல்லை. பலர் உயிருக்கு அஞ்சி பணியை விட்டு விலகி வருகின்றனர். கமேனியிடம் எஞ்சியிருப்பது சில கூலிப்படையினர் மட்டுமே. இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். போராட்டத்தை கைவிடாதீர்கள்; நான் விரைவில் நாடு திரும்புவேன்” என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
