ரியாத்: சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்ததாக கண்டறியப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 56,000 பேரை அந்த நாடு கடந்த சில ஆண்டுகளில் நாடு கடத்தியுள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் சுற்றுலா, உம்ரா மற்றும் ஹஜ் விசாக்களை பயன்படுத்தி வளைகுடா நாடுகளுக்கு சென்று, பிச்சை எடுப்பதை தொழிலாக மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிச்சைக்காரர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா நடைமுறைகளில் சில நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
மெக்கா, மதீனா போன்ற புனித நகரங்களில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, சவுதி அரேபியா கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 56,000 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனை தடுக்கும் நோக்கில், பாகிஸ்தான் அரசு ஆயிரக்கணக்கான பயணிகளின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்துள்ளதுடன், பிச்சை எடுத்ததாக நாடு கடத்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்துள்ளது. ஆனால், மோசடி முறைகள் மூலம் சிலர் மீண்டும் பயணம் மேற்கொள்வதாக தூதரக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
