பா.ஜ.வை வைத்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ எடை போடுவது பெரிய தவறு: மோகன் பாகவத்
போபால்: பா.ஜ.வை வைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகப்பெரிய தவறு என்றும், அதன் சீருடை மற்றும் பயிற்சிகளை வைத்து துணை ராணுவ அமைப்பாக கருதக் கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
நாங்கள் சீருடை அணிகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்துகிறோம். கம்பு வைத்து பயிற்சிகளும் செய்கிறோம். இதை வைத்து ஆர்.எஸ்.எஸ். ஒரு துணை ராணுவ அமைப்பு என நினைத்தால், அது மிகப்பெரிய தவறு என்றார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை புரிந்து கொள்வது எளிதானது அல்ல. அது தனித்துவமான அமைப்பு. பா.ஜ. வழியாகவோ, அல்லது அதன் கிளை அமைப்பான வித்யா பாரதி வழியாகவோ ஆர்.எஸ்.எஸ்.-ஐ புரிந்து கொள்ள முயற்சிப்பதும் தவறான அணுகுமுறை என அவர் தெரிவித்தார்.
இன்றைய காலத்தில் மக்கள் சரியான தகவலை தெரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. மூலத்தை அறிய வேண்டிய ஆர்வமும் இல்லை. எதற்கெடுத்தாலும் விக்கிபீடியாவை மட்டுமே நம்புகின்றனர். ஆனால், அதில் உள்ள அனைத்தும் உண்மை அல்ல. ஆர்.எஸ்.எஸ். பற்றி அறிய விரும்பினால், அதைப் பற்றி உண்மையாக அறிந்தவர்களிடம் கேட்க வேண்டும் என்றார்.
ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்களை உருவாக்கி, பாரதத்தின் வளர்ச்சிக்கான லட்சியங்கள், சிந்தனைகள் மற்றும் மதிப்புகளை அவர்களிடம் ஊட்டுகிறது. ஆனால், துாரத்தில் இருந்து ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல ஸ்வயம் சேவகர்களை இயக்கும் அமைப்பாக அது ஒருபோதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தேசப்பற்று மிகுந்த சூழலை உருவாக்கும் தேச அபிமானிகளை, தன் கிளை அமைப்புகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். வளர்த்தெடுத்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷயத்தை எதிர்க்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ உருவான அமைப்பு என்ற கருத்து பரவலாக உலவுகிறது. ஆனால், அது உண்மை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், “ஆர்.எஸ்.எஸ். பற்றி என் கருத்துகளை கூறிவிட்டேன். புரிந்து கொள்ள விரும்பினால் இயக்கத்திற்குள் வந்து பாருங்கள். இனிப்பைப் பற்றி இரண்டு மணி நேரம் பேசினாலும் அதன் சுவை தெரியாது; அதை சாப்பிட்டால்தான் தெரியும்,” என மோகன் பாகவத் கூறினார்.
