பா.ஜ.,விடம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை: திக்விஜய் சிங் விளக்கம்
புதுடில்லி:
பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பாராட்டியதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி., திக்விஜய் சிங், அவற்றின் சித்தாந்தத்தை தொடர்ந்து எதிர்ப்பதாகவும், பா.ஜ.,விடம் இருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான திக்விஜய் சிங், சமீபத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி, சமூக–பொருளாதார பிரச்னைகளுடன் கட்சிக்குள் சீர்திருத்த நடவடிக்கைகளும் அவசியம் என வலியுறுத்தியிருந்தார். கட்சிக்குள் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதே கருத்துகளை அவர் தனது சமூக வலைதள பதிவிலும் வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 1996ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த சங்கர்சிங் வகேலா பதவியேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை திக்விஜய் சிங் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் பா.ஜ., உயர்மட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருப்பது இடம்பெற்றிருந்தது. இதன் மூலம், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைமையை அவர் பாராட்டியதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தை முன்வைத்து, பா.ஜ., தரப்பில், காங்கிரசில் ஒரே குடும்பமே நீண்ட காலமாக தலைமை பொறுப்பில் இருப்பதை திக்விஜய் சிங் அம்பலப்படுத்தியுள்ளதாகவும், இதற்கு ராகுல் காந்தி பதில் அளிப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், சர்ச்சைக்கு விளக்கம் அளித்த திக்விஜய் சிங், கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருப்பதாகவும், சட்டசபை மற்றும் பார்லிமென்ட் என அனைத்து நிலைகளிலும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தார். பா.ஜ.,–ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை எப்போதும் எதிர்ப்பதாக கூறிய அவர், அவற்றின் வலுவான நிறுவன கட்டமைப்பை மட்டுமே பாராட்டியதாக விளக்கம் அளித்தார். அவற்றுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என்றும் அவர் கூறினார்.
திக்விஜய் சிங்கின் இந்த விளக்கம், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் தலைமையை விமர்சித்த அவரது கருத்துகள் சர்ச்சையான நிலையில் வெளியாகியுள்ளது. இருப்பினும், கட்சிக்குள் அவர் வெளியிட்ட கருத்துகள் காங்கிரஸ் வட்டாரத்தில் விவாதத்தையும் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளன.
இதனிடையே, திக்விஜய் சிங்கின் கருத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் லோக்சபா எம்.பி., சசி தரூர் கருத்து தெரிவித்தார். கட்சியில் ஒழுக்கமும், நிறுவன வலிமையும் மிகவும் முக்கியம் என்றும், காங்கிரஸ் 140 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட கட்சி என்பதால் அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்றும் அவர் கூறினார். கட்சியை வலுப்படுத்த உள் ஒழுக்கம் மற்றும் நிறுவன கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற திக்விஜய் சிங்கின் கருத்தை தானும் ஏற்றுக்கொள்வதாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.
