பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; என்ஐஏ குற்றப்பத்திரிக்கை
புதுடில்லி:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் ஜாட் முக்கிய சதிகாரராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஜம்மு–காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்’ பொறுப்பு ஏற்றது.
பின்னர், கடந்த ஜூலை மாதம் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரால் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை தெரியவந்தது.
இதன் அடிப்படையில், குல்காமைச் சேர்ந்த கட்டாரியா (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், உள்ளூர்வாசிகளான பஷீர் மற்றும் பர்வேஸ் ஜோதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1,597 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் ஜாட் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் பைசல் ஜாட் என்கிற சுலேமான் ஷா, ஹபீப் தாஹிர் என்கிற ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த எட்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களைத் திட்டமிட்டு தொடர்ந்து ஆதரித்து வந்த பாகிஸ்தானின் பங்கு குறித்து ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
மேலும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதர் ஆகியோர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
