புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைப்பற்றப்பட்ட ‘கோ புரோ’ கேமரா, தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக சீனாவில் செயல்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கூடுதல் தகவல்களை பெறுவதற்காக சீனாவின் உதவியை என்.ஐ.ஏ. நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பாக கருதப்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
குறிப்பாக ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த விசாரணையின் போது ‘கோ புரோ’ என்ற நவீன கேமரா முக்கிய ஆதாரமாக அதிகாரிகளிடம் கிடைத்தது.
அந்த கேமராவை ஆய்வு செய்தபோது, பஹல்காமில் தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு சீனாவில் அந்த கேமரா பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால், தாக்குதலுக்கு முன்பாக அந்த பகுதியை உளவு பார்ப்பதற்காக இந்த கேமரா பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த கேமரா தொடர்பான தகவல்களை ஆய்வு செய்வதன் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கான சதித் திட்டத்தை எவ்வாறு வகுத்தனர் என்பதையும் கண்டறிய முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதன் காரணமாக அந்த கேமரா குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்காக சீனாவின் உதவியை என்.ஐ.ஏ. நாடியுள்ளது.
இந்த கேமரா தொடர்பான விவரங்களை ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திலும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில், 2024 ஜனவரி 30ஆம் தேதி சீனாவின் டாங்குவான் பகுதியில் இந்த கேமரா முதன்முறையாக செயல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்த இந்த கேமரா பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம் எவ்வாறு சென்றது, அதை முதலில் பயன்படுத்தியது யார், அதை வாங்க பணம் செலுத்தியது யார் போன்ற விவரங்களை அறிய சீனாவுக்கு என்.ஐ.ஏ. கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த கேமராவை ஆதாரமாக கொண்டு தாக்குதல் திட்டமிடப்பட்ட விதம் மற்றும் அதை செயல்படுத்தியவர்கள் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் சீனா இடையே பரஸ்பர சட்ட உதவி தொடர்பான ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் நாடு கடந்த குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை ஐக்கிய நாடுகள் மாநாட்டின் விதிமுறைகளின் கீழ் இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
