சென்னை: ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சிகள், பஹல்காமில் இந்தியர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஏன் போராட்டம் நடத்தவில்லை என பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்தின் பின்னணியில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரான் ஆட்சியாளர் கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து உலகின் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவிலும் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்தபோது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எந்தவிதமான போராட்டமும் நடத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஆனால் ஈரான் தொடர்பான பிரச்சினையில் சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஆசிரியர்கள், நர்சுகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராடும்போது இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
