இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் 15 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பலுச் விடுதலைப்படை அமைப்பு, பாகிஸ்தானிலிருந்து விடுதலை கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பலுசிஸ்தானின் குவெட்டா, மாஸ்துங், நுஸ்கி, டல்பன்டின், காரன், பஞ்சூர், டம்ப், குவாதர், பஸ்னி உள்ளிட்ட பகுதிகளில், பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் கடும் பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதல்களில் தற்கொலைப்படை தாக்குதல் குழுவைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 30-ம் தேதி பஞ்சூர் மற்றும் ஹர்னாய் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 41 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், கடந்த இரண்டு நாட்களில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவுக்கு தொடர்பில்லை!
பலுசிஸ்தானில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி குற்றம்சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை என்றார். தங்களின் உள்நாட்டு பிரச்னைகள் மற்றும் தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பாகிஸ்தானின் வழக்கமான நடைமுறை என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு வன்முறை சம்பவத்திற்கும் பிறரை குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, பலுசிஸ்தான் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
