புதுடில்லி: அமெரிக்கப் பருத்தி இறக்குமதி நிபந்தனை காரணமாக இந்திய பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்கப் பருத்தி இறக்குமதி நிபந்தனை இந்திய பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளித் துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார். மேலும், வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட 0 சதவீத வரிச் சலுகை இந்தியாவுக்கு மறுக்கப்படுவதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்ததாவது: ராகுல் உண்மைகளை புரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களை பரப்புகிறார். போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும். அதே நேரத்தில் தொழில்துறை வளர்ச்சியையும் உறுதி செய்யும். இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஓமன் உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
